நியாய விலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்க, இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில், தனியார்
தொண்டு நிறுவனங்கள் சார்பில் விவசாயிகளுக்கு இலவச தார்பாய்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்ரது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட நெற்களத்தை தொடங்கி வைத்த அவர் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர், “தச்சூர் கிராமத்தில் மனம் என்னும் தொண்டு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள இளைஞர்கள், வெளிநாடுகளில் பணிபுரிந்தாலும், தாங்கள் பிறந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பொருட்டு இந்த மனம் என்னும் நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.
இன்னும் ஆறு மாத காலத்திற்குள் இக்கிராமத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அனைத்து பொருள்களும் தரமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. ஆகவே இதனை தடுக்கும் வகையில், நியாய விலைக் கடைகளுக்கு இரவு நேரங்களில், பொருட்கள் ஏற்றி செல்ல நாங்கள் தடை விதித்துள்ளோம். பகல் நேரங்களில் மட்டுமே பொருட்கள் இறக்கப்பட வேண்டும். அப்போதுதான் தரமற்ற பொருட்கள் இருந்தால், அதை உடனடியாக மாற்ற முடியும். இனிவரும் காலங்களில் மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படும். அதை உடனடியாக அப்படியே அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைத்து, தரமான அரிசியாக வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.