இலங்கையில் உணவு பஞ்சம் – உணவின்றி தவிக்கும் 60 லட்சம் பேர்

இலங்கையில் உணவுக்கு உத்தரவாதம் இன்றி 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருதாக ஐநா உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்து முதல்முறையாக கடும் பொருளாதார நெருக்கடியையும் பஞ்சத்தையும் சந்தித்து வருகிறது இலங்கை.…

இலங்கையில் உணவுக்கு உத்தரவாதம் இன்றி 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருதாக ஐநா உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து முதல்முறையாக கடும் பொருளாதார நெருக்கடியையும் பஞ்சத்தையும் சந்தித்து வருகிறது இலங்கை.

இலங்கை அரசிடம் போதிய பணம் இல்லாததால், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், எரிபொருட்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.

இதனால், இவற்றிற்கு மிகப் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றின் விலையும் மிக மிக கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் மக்களுக்கு எவ்வாறு உணவு கிடைத்து வருகிறது என்பது குறித்து ஐநா உலக உணவு திட்டம் ஆய்வு மேற்கொண்டது.

இலங்கையில் சுமார் 2 கோடியே 16 லட்சம் மக்கள் உள்ள நிலையில், 60 லட்சம் மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 63 லட்சம் மக்கள் அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இன்றி தவித்து வருவது தெரிய வந்துள்ளதாக இலங்கைக்கான ஐநா உலக உணவு திட்ட இயக்குநர் அப்துர் ரஹிம் சித்திக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையில் உணவு பணவீக்கம் 80 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களில் சுமார் 53 லட்சம் பேர், குடும்பத்தில் உள்ள இளையோருக்கு உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்களுக்கான உணவை குறைத்துக்கொள்வது, உணவு உண்ண தவிர்ப்பது போன்ற வருந்தத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அப்துர் ரஹிம் சித்திக் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள 10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் அதாவது 62.6 லட்சம் பேர் அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இன்றி வறுமையில் வாடி வருவதாக தெரிவித்துள்ள சித்திக், கர்ப்பிணிகளும் போதிய உணவு இன்றி கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா இலங்கை உணவு திட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சித்திக், வரும் டிசம்பர் மாதம் வரை இந்த சேவையைத் தொடர வேண்டுமானால் 63 மில்லியன் டாலர் நிதி தேவை என்றும், இதுவரை இதில் 30 சதவீத நிதி உதவி மட்டுமே கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே, இலங்க மக்களின் நிலையை கருத்தில் கொண்டு உலக நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டும் என்று ஐநா உலக உணவு திட்ட இயக்குநர் அப்துர் ரஹிம் சித்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.