குட்கா முறைகேடு வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யக் கோரியதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய முன்னாள் அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரிகள், வணிக வரித் துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்பட்டதாக 2017ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ், எஸ்.பி. விமலா, கலால் துறை , உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சிபி ஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேரை சிபிஐ கைது செய்தது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில், சட்டவிரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயில் பல மாநிலங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான 246 கோடி சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர். இந்நிலையில், குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்கப்பட்ட நிலையில், வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








