இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்-முரசொலி தலையங்கம்

இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, ஈழத்தமிழர் நலன் சார்ந்து சில அரசியல் கோரிக்கைகளை…

இலங்கையில் ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா, ஈழத்தமிழர் நலன் சார்ந்து சில அரசியல் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே திமுகவின் உள்ளார்ந்த கோரிக்கை. மனிதாபிமான உதவி செய்வது, பணம் கொடுப்பது, மருந்துப் பொருள்கள் கொடுப்பதோடு தனது கடமை முடிந்ததாக இந்திய அரசு நினைக்கக் கூடாது.

கடந்த காலங்களில் மலையகத் தமிழர்களது உரிமைகளுக்காக இலங்கையும் இந்தியாவும் ஒப்பந்தம் செய்து கொண்ட வரலாறு நமக்குண்டு. இலங்கைத் தமிழர் உரிமைக்காக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

இத்தகைய அரசியல் உரிமையின் தொடர்ச்சியை செய்தாக வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. இலங்கை அரசியலமைப்பின்13ஆவது திருத்தத்தின்படி தமிழர்கள் பெரும் பான்மையாக வாழும் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படும்.

அந்த மாகாணம் உரிமை பெற்ற மாகாணமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் 1987 ஆம் ஆண்டு போட்ட ஒப்பந்தம் 35 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு – கிழக்கு என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே அங்கு சிங்களக் குடியேற்றங்கள் அதிகமாக நடந்தன. இந்தச் சட்டம் செல்லாது என்று இலங்கை உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது.

எனவே, புதிய ஒரு சட்டத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியாக வேண்டும். அதுதான் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் நலன் சார்ந்ததாக அமைய முடியும்.

ஒரு புதிய கூட்டாட்சி அரசியலமைப்பை இலங்கையில் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால்தான் அது அங்குள்ள தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரும் அரசியலமைப்பாக இருக்க முடியும்.

அனைத்து இனத்தவருக்குமான அரசியலமைப்பு, அனைத்து மதத்தவருக்குமான அரசியலமைப்பு, அனைத்து மொழியினருக்குமான அரசியலமைப்பு அங்கு உருவாக வேண்டும்.

அனைவரையும் மனநிறைவு கொள்ள வைக்கும் ஒரு அரசியலமைப்பை உருவாக்காமல் இலங்கையில் அமைதியை உருவாக்க முடியாது. அப்படி உருவாக்கினால் அது நிரந்தரமான அமைதியாகவும் இருக்க முடியாது.

ஒற்றையாட்சித் தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தலே, ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

அனைவருக்குமான அரசியலமைப்பே, அமைதிக்கு வழிவகுக்கும். புறக்கணித்தல், புரட்சிக்கே வழிவகுக்கும் என்று அந்தத் தலையகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. கோத்தயபய ராஜபக்ச பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். தற்போது சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்துள்ளார். புதிய அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்ட்டுள்ளார். எனினும், ரணில் விக்ரமசிங்கே அதிபராவதற்கும் பொதுமக்களில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.