கடவுளைத் தவிர யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: நீதிமன்றம்

கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக்…

கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கோயிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய சேதுபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில், “சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வடவன்பட்டி பகுதியில் உள்ள சண்டி வீரன் கோவில் திருவிழா மற்றும் எருதுகட்டு நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இங்கு நடைபெறக்கூடிய கோவில் திருவிழாக்களில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடுவார்கள் கோவில் திருவிழா மற்றும் எருது விடும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வடவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் ஜாதி அடிப்படையாகக்கொண்டு முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் வாட்டாச்சியர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு யாருக்கும் எந்த முதல் மரியாதையும் செலுத்துவது இல்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே யாருக்கு முதல் மரியாதை அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு ஆஜரான வழக்கறிஞர் கோயில் திருவிழாக்களில் யாருக்கு முதல் மரியாதை கிடையாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, “கோயில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல” என்று கூறிய நீதிபதி மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கோவிலின் யாருக்கு முதல் மரியாதை அளிக்க வேண்டாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.