“திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது” – தர்மேந்திர பிரதான் பேட்டி!

தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை நீக்க முடியாதோ, அது போலத்தான் திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை தடுக்க முடியாது என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோயில் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “நேற்றைய தினம் புகழ்வாய்ந்த ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்தேன். அதன் பிறகு இன்று அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தரிசனம் செய்தது மகிழ்ச்சி. கலை பண்பாடு கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையிலே நம்முடைய பாரதப் பிரதமரின் செயல்பாடு இருந்து வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் படி ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி கல்வி முறையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் தான் இருக்க வேண்டும், அதுதான் தேசிய கல்விக் கொள்கையின் படி இருக்கிறது. ஆளும் தமிழக அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்
மாணவர்களுடைய கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் நல்ல ஒரு உயர் பதவியோ அல்லது அதிகாரியாகவும் வருவார்கள்.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர், “நீதியரசர் திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றலாம் என்று கூறிய தீர்ப்புக்கு அனுமதி மறுத்து அரசியல் ரீதியாக இதை தமிழக அரசு கையாளுவது கண்டிக்கத்தக்கது. மதத்தின் மீதும் இந்துக்கள் புனிதமாக கருதக் கூடிய திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றுவதை தடுக்க கூடியவர்கள் முட்டாள்கள். சிவபெருமான் அவர்களுக்கு பாடம் புகட்டுவார். மேலும், தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை பிரிக்க முடியாதோ, அதுபோலத்தான் இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கக் கூடிய திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை இவர்களால் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.