இன்ஸ்டாகிராமில் தேவையற்ற பதிவுகளுக்கு இனி ‘செக்’! – மெட்டா அதிரடி மாற்றம்!

இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பாலியல் ரீதியாகத் தூண்டும் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களைக் குறைக்க, தனது பரிந்துரை வழிமுறைகளில் (Recommendation Systems) மாற்றங்களைச் செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, இன்ஸ்டாகிராமில் பயனர்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து பரிந்துரைக்கப்படும் பாலியல் ரீதியாகத் தூண்டும் மற்றும் வன்முறை சார்ந்த பதிவுகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்குத் தேவையற்ற உள்ளடக்கங்கள் காட்டப்படுவதைக் குறைத்து, இன்ஸ்டாகிராம் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்துவதே இந்த மாற்றங்களின் நோக்கம் என மெட்டா கூறியுள்ளது.

பரிந்துரை முறைகளில் மாற்றம்!

கடந்த ஓராண்டாகவே பயனர்களின் கருத்துகளின் அடிப்படையில், இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளடக்கங்களைக் கண்காணிக்கும் முறையை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் புகார் அளிக்கும் வரை காத்திருக்காமல், தேவையற்ற உள்ளடக்கங்களைத் தானாகவே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியப் பயனர்கள் விரும்பாத உள்ளடக்கங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவுக்கென பிரத்யேகமாகத் தனது தொழில்நுட்ப அமைப்புகளை மேம்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த மாற்றங்களின் மூலம், இன்ஸ்டாகிராமின் பரிந்துரை வழிகாட்டுதல்களுக்கு உட்படாத உள்ளடக்கங்கள் முன்கூட்டியே அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தொடர்பாகப் பயனர்கள் அளிக்கும் புகார்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து நடவடிக்கை!

இன்ஸ்டாகிராமின் பரிந்துரை முறைகளில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டிருப்பது, மத்திய அரசு மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரி, பரிந்துரை நடைமுறைகளை மறுஆய்வு செய்ய அறிவுறுத்திய ஒரு மாதத்திற்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. கடந்த மாதம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் பரிந்துரை முறைகள் மூலம் அதிகளவில் பரவக்கூடிய பதிவுகளைக் கண்டறிந்து, அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தியிருந்தது. குறிப்பாக, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய, வன்முறையைத் தூண்டக்கூடிய அல்லது பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கண்காணிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டது.

தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க உத்தரவு!

இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திற்கு அனுப்பிய அறிவுறுத்தலில், நாட்டில் நடைபெறும் முக்கியமான பொது நிகழ்வுகள் மற்றும் தற்போதைய நிகழ்வுகள் தொடர்பான சில உள்ளடக்கங்கள், மெட்டா நிறுவனத்தின் தளங்களில் பயனர்களுக்கு அதிகளவில் பரிந்துரைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதி தொடர்பான சூழல்களில் வெளியிடப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள், கருத்துகள் மற்றும் தகவல் படங்கள் ஆகியவை போதிய பின்னணி விளக்கங்கள் இல்லாமல் பரிந்துரைக்கப்படும்போது, பொதுமக்களிடையே குழப்பம், அச்சம் மற்றும் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியிருந்தது.

இதையடுத்து, தவறாகச் சித்தரிக்கப்பட்ட, திருத்தப்பட்ட அல்லது உரிய பின்னணி விளக்கங்கள் இல்லாத தகவல்கள் பயனர்களுக்கு மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்படுவதையும், அதிகளவில் பரப்பப்படுவதையும் தடுக்கும் வகையில், தனது உள்ளடக்கத் தரவரிசை மற்றும் பரிந்துரை அமைப்புகளை மறுஆய்வு செய்யுமாறு மெட்டா நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பரிந்துரை முறைகளில் மெட்டா நிறுவனம் தற்போது மாற்றங்களைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.