அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் மிக முக்கியமான வனப்பகுதிகளில் ஒன்றான முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை கோட்டத்தில், வரும் டிசம்பர் மாதம் முதல் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவுட்சோர்சிங் (Outsourcing) முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய ஒப்பந்தப்புள்ளிகளை வனத்துறை அறிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல் வாக்குறுதியில் கூறிய ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்குதல், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் போன்ற வாக்குறுதிகளை ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்தும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தவெக அரசு, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை ஆகியவற்றின் வரிசையில் தற்போது வனத் துறையிலும் தனியார்மயத்தைப் புகுத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
எங்கும் தனியார் மயம் எதிலும் தனியார் மயம் என்ற நோக்கில் அரசுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள தவெக அரசு, நாட்டின் இயற்கை வளங்களையும், வனவிலங்குகளின் பாதுகாப்பையும் அலட்சியப்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
புலிகள் உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகளைப் பாதுகாத்தல், வேட்டையாடுதலைத் தடுத்தல், வனப்பகுதிகளைக் கண்காணித்தல், வனவிலங்கு – மனித மோதல்களைத் தடுப்பது உள்ளிட்ட மிகுந்த பொறுப்பும், நிபுணத்துவமும் தேவைப்படும் பணிகளில், உரிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால், வனவிலங்குகளின் உயிருக்கும், வனப்பகுதிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, ஒட்டுமொத்த முதுமலை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என வன ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, முதுமலை புலிகள் காப்பகத்தில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிப்பதற்கான முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெறுவதோடு வனவிலங்குகள் பாதுகாப்பு, வேட்டையாடுதல் தடுப்பு மற்றும் வனப்பகுதிகளைக் கண்காணித்தல் போன்ற முக்கியப் பணிகளில் உரிய அனுபவமும், முறையான பயிற்சியும் பெற்ற தகுதியான பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை TNPSC மூலமாக மேற்கொள்ள வேண்டும் என வனத் துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




