ஜேம்ஸ் பாண்ட் ஆகிறார் ராபர்ட் பாட்டின்சன்!

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வாகியுள்ள நடிகர் ராபர்ட் பாட்டின்சன், இது தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும், தனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்றான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் ராபர்ட் பாட்டின்சன் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், ஏற்கனவே ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் கிரெய்க்கிற்குப் பிறகு, 007 என்ற ரகசிய உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்கும் 7-வது நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தற்போது 40 வயதாகும் ராபர்ட் பாட்டின்சன், இந்த வாய்ப்பை தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்நாள் கனவு நனவானது!

இதுகுறித்து 007 படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ராபர்ட் பாட்டின்சன் கூறியிருப்பதாவது: “ஜேம்ஸ் பாண்ட் என்பது திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்றாகும். அத்தகைய 007 கதாபாத்திரத்தில் நடிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ், தயாரிப்பாளர்கள் ஏமி பாஸ்கல், டேவிட் ஹேமன், தன்யா மற்றும் அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதாபாத்திரம் எனது கனவு நனவான தருணம் என்று சொல்வது கூட குறைவான வார்த்தையாகும். இந்தக் கூட்டணியிலும், திறமையான குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதிலும் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

புதிய பரிமாணத்தில் ஜேம்ஸ் பாண்ட்!

இந்தப் படத்தை இயக்கவுள்ள டெனிஸ் வில்லெனுவ், ராபர்ட் பாட்டின்சன் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு புதிய பரிமாணத்தைக் கொண்டுவருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ராபர்ட் பாட்டின்சனிடம் 007 கதாபாத்திரத்திற்கே உரிய காலத்தைக் கடந்த தனித்துவமான ஆன்மா உள்ளது. அதே நேரத்தில், அவர் முற்றிலும் புதியதொரு உணர்வையும் இந்தக் கதாபாத்திரத்திற்குக் கொண்டுவருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்களான ஏமி பாஸ்கல் மற்றும் டேவிட் ஹேமன் ஆகியோரும் ராபர்ட் பாட்டின்சனைப் பாராட்டியுள்ளனர். துணிச்சலான நடிப்பு, தன்னைத்தானே நகைச்சுவையாக விமர்சித்துக் கொள்ளும் இயல்பு மற்றும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் ஆகியவை அவரைச் சிறந்த ஜேம்ஸ் பாண்டாக மாற்றும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் பாரம்பரியம் ராபர்ட் பாட்டின்சனின் கைகளில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டேனியல் கிரெய்க்கிற்குப் பிறகு 7-வது ஜேம்ஸ் பாண்ட்!

இதுவரை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் சீன் கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் ப்ராஸ்னன் மற்றும் டேனியல் கிரெய்க் ஆகிய 6 நடிகர்கள் நடித்துள்ளனர். தற்போது ராபர்ட் பாட்டின்சன் 7-வது நடிகராக இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார். தொடர்ந்து, ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கே உரிய கருப்பு நிற டக்சிடோ உடையில் ராபர்ட் பாட்டின்சன் இருக்கும் முதல் தோற்றத்தையும் அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் வெளியிட்டது. இந்தப் படத்திற்கான தேர்வுப் பட்டியலில் ஜோஷ் ஓ’கானர் மற்றும் காலம் டர்னர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம்!

ஜேம்ஸ் பாண்ட் தொடரின் 26-வது அதிகாரப்பூர்வ திரைப்படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ் இப்படத்தை இயக்குகிறார். Peaky Blinders தொடரை உருவாக்கிய ஸ்டீவன் நைட் திரைக்கதை எழுதுகிறார். ஏமி பாஸ்கல் மற்றும் டேவிட் ஹேமன் ஆகியோர் தயாரிக்கின்றனர். 2025-ம் ஆண்டு இந்தத் திரைப்படத் தொடரின் முழுமையான படைப்பாக்கக் கட்டுப்பாடு மற்றும் உரிமைகளை அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு கைப்பற்றியதைத் தொடர்ந்து உருவாகும் முதல் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் இதுவாகும். டேனியல் கிரெய்க் நடித்த 5 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் பயணம், 2021-ம் ஆண்டு வெளியான No Time to Die திரைப்படத்துடன் நிறைவடைந்தது.

‘ட்விலைட்’ முதல் ‘தி பேட்மேன்’ வரை!

Harry Potter and the Goblet of Fire திரைப்படம் மற்றும் Twilight திரைப்படத் தொடர் மூலம் ராபர்ட் பாட்டின்சன் உலகளவில் பிரபலமானார். தொடர்ந்து பல வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை நிரூபித்தார். 2022-ம் ஆண்டு வெளியான The Batman திரைப்படத்தில் புரூஸ் வெய்ன் என்ற பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார். கடைசியாக 2026-ம் ஆண்டு வெளியான The Odyssey திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக 2028-ம் ஆண்டு வெளியாகவுள்ள The Batman II திரைப்படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். இந்நிலையில், தற்போது ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்குத் தேர்வாகியிருப்பது அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.