மணிலாவின் பழமையான குருத்வாரா மறுசீரமைப்பு: அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான குருத்வாரா கல்சா திவானின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) உச்சி மாநாடு மற்றும் 21-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை மூன்று நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 17-ம் தேதி மணிலாவில் உள்ள அந்நாட்டின் பழமையான குருத்வாராவான கல்சா திவானுக்குச் சென்று, அதன் மறுசீரமைப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார்.

நூற்றாண்டு பழமையான குருத்வாரா!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைந்துள்ள கல்சா திவான் குருத்வாரா 1901-ம் ஆண்டு முதன்முதலில் நிறுவப்பட்டது. 1903-ம் ஆண்டு முறைப்படி அமைப்பாகச் செயல்படத் தொடங்கியது. பின்னர் 1924-ம் ஆண்டு கல்சா திவான் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. இந்த குருத்வாரா சீக்கிய மக்களின் ஆன்மிக மையமாக மட்டுமின்றி, மணிலாவில் வாழும் சீக்கியர்கள் மற்றும் பிற சமூகத்தினரிடையே கலாச்சார, சமூக மற்றும் தொண்டு நடவடிக்கைகளிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. மேலும், பிலிப்பைன்ஸ் சமூகத்திற்கும் அங்குள்ள இந்திய – சீக்கிய சமூகத்திற்கும் இடையிலான முக்கியமான பாலமாக இந்த குருத்வாரா விளங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சிறப்பான நாள் – பிரதமர் மோடி!

குருத்வாராவின் மறுசீரமைப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதில், “நவம்பர் 17-ம் தேதி மிகவும் சிறப்பான நாளாகும். மணிலாவில் உள்ள புகழ்பெற்ற குருத்வாரா கல்சா திவானின் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்குவதைக் குறிக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் பெருமை எனக்குக் கிடைத்துள்ளது. இந்த குருத்வாரா ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையைக் கொண்டது. மிகுந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மையமாகவும் திகழ்கிறது. சீக்கிய சமய குருமார்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட சீக்கிய சமூகம், உலகம் முழுவதும் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளது. பிறருக்கு சேவை செய்வதிலும், சிறந்த உலகத்தை உருவாக்குவதிலும் முன்னணியில் திகழ்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மணிலாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மூன்று நாள் பயணமாக நவம்பர் 15-ம் தேதி மணிலா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அகுசானின் புகழ்பெற்ற கோல்டன் தாரா சிலையின் மாதிரி மற்றும் 9, 10-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க லகுனா செப்பேட்டின் மாதிரி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். மேலும், இரு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் இணைந்து பூர்ண கும்ப ஸ்லோகத்தைப் பாடி வரவேற்றனர். தொடர்ந்து பாலிவுட் நடனம் மற்றும் பாங்க்ரா நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

பிலிப்பைன்ஸ் நாடு 2026-ம் ஆண்டுக்கான ஆசியான் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது. இதையொட்டி, “நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து வழிநடத்துவோம்” (Navigating Our Future, Together) என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு, தென்சீனக் கடல் பகுதியில் நிலவும் பதற்றங்கள் மற்றும் மியான்மரின் அரசியல் நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளன. இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையிலான தூதரக, பொருளாதார, கலாச்சார மற்றும் ஆன்மிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.