”தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் என்.டி.ஏ கூட்டணியே வெற்றி பெறும்”- நயினார் நாகேந்திரன்…!

தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவராக இருந்த ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதை தொடர்ந்து புதிய தேசியத் தலைவரை நியமிப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில், பிஹார் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள நிதின் நபின், பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

”பாஜக புதிய செயல் தலைவரையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதின் நபினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். பன்முகத்தன்மையுடன் செயல்படும் நிதின் நபினை பாஜக செயல்தலைவராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியானது. வாரிசு அரசிலை தகர்க்கும் வகையில் ஒரு இளைஞரை செயல் தலைவராக பாஜக நியமனம் செய்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. ஏனெனில் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் கூட்டணியில் சில கட்சிகள் வந்து சேருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தற்போது புதிதாக எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை ஈடுபடவில்லை.

தொகுதி பங்கீடு குறித்து தற்போது எதுவும் முடிவும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.. தமிழ்நாட்டில் பாஜக நடத்தி வரும் யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் நிச்சயம் கலந்து கொள்வார்கள்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.