அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பும் இல்லை – எல்ஐசி விளக்கம்

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பீடும் இல்லை என எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அக்குழுமத்திற்கு சுமார்…

அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள பங்குகளால் எந்த இழப்பீடும் இல்லை என எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அக்குழுமத்திற்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் 16 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு, எல்ஐசி இழப்பை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், அதானி குழும முதலீடு குறித்து எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் அதானி குழும நிறுவனங்களில் 36 ஆயிரத்து 474 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஜனவரி 27ம் தேதி எல்ஐசி முதலீடு செய்த பங்குகளின் சந்தை மதிப்பு 56 ஆயிரத்து 142 கோடி ரூபாயாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தில் அரசு விதிகளுக்குட்பட்டும், காப்பீடு ஒழங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டு விதிகளுக்கும் உட்பட்டே முதலீடு செய்யப்பட்டுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.

2022 செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, எல்ஐசியின் சொத்து மதிப்பு சுமார் 42 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில் அதானி குழுமத்தில் எல்ஐசி செய்த முதலீடு ஒரு சதவீதத்திற்கும் (( 0.975 %)) குறைவே என்றும் விளக்கம் அளித்துள்ள எல்ஐசி நிறுவனம், அதன் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் பயம் கொள்ளத்தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.