சினிமாத் துறையை அரசு தொழில்துறையாக அறிவித்தும், அதற்கான எந்த உதவிகளும் சினிமாத்துறைக்கு வழங்கப்படவில்லை என இயக்குநர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார்
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பாஜ்வா நடிக்க, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் நட்டி நடராஜ், ராம்கி, பூனம் பாஜ்வா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், ஸ்ரீராம் கார்த்திக், பிரஜின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசும்போது, “இந்தியாவில் முதல் பத்து கேமராமேன்களில் ஒருவராக இருக்கும் நட்டி, நடிப்பின் மீதான காதலால் ஒரு நடிகராக மாறி ஒரு துணை நடிகரைப்போல் எளிமையாக இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் கதைகளை தேர்வு செய்யும் விதமும் ஒவ்வொரு படத்திற்கும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
சினிமா துறையை அரசு தொழில்துறையாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த உதவிகளும் சினிமாத்துறைக்கு வழங்கப்படவில்லை. வங்கியில் கடன் கேட்டால் சினிமாவிற்காகக் கொடுத்த 250 கோடி வாராக்கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் மற்ற தொழில்களில் 10 லட்சம் கோடி வாராக்கடன் என்று அறிவிப்பு வெளியானதே, அவர்களுக்கு மட்டும் எப்படி கடன் கொடுக்க முடிந்தது?
இந்தத் துறை 150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு துறை. இந்தத்துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்களது எதிர்காலத்துக்காக அவர்களது சம்பளத்தில் பிடிக்கப்படும் நலநிதி கூட அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட்டு, ஆனால் அது வேறு துறைகளில் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும். அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருப்பது எங்கள் கடமை” என்று கூறினார்.
நடிகர் நட்டி நடராஜ் பேசுகையில், “ஒரே நாளில் நடக்கும் கதை தானே சிட்டிக்குள்ளேயே இந்த படத்தை முடித்துவிடலாம் என்று நினைக்காமல் கதையின் தேவைக்கு ஏற்ப ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய செலவு செய்து இந்தப் படத்தைப் படமாக்க தயாரிப்பாளர் முன்வந்ததில் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரிகிறது. படப்பிடிப்பில் யானைகள் எப்போது வருமோ என்கிற ஒரு சூழலில்தான் திகிலுடன் நடித்தோம்.
இந்த படத்தின் கதையை இயக்குநர் தனசேகரன் என்னிடம் கூறியபோது ஒரே நாளில் இவ்வளவு விஷயங்களா..? உங்களால் இதை எல்லாவற்றையும் காட்டி விட முடியுமா என்று கேட்டேன். சொன்னபடியே அழகாக அத்தனையும் படத்திற்குள் கொண்டு வந்துள்ளார். ‘செக்கச்சிவந்த சுந்தரி’ பாடலில் ராம்கி மூன்று நடிகைகளுடன் நடனமாடியுள்ளார். அந்தப்பாடலில் எனக்கு இடம் இருக்கிறதா என்று கேட்டபோது உங்களுக்கு இதில் வேலை ஒன்றும் இல்லை என ஒதுக்கி விட்டனர்” என்றார்.