பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய கூட்டம் மே 31ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனையோ, முடிவோ எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த பிரசில் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததை சுட்டிக்காட்டினார். இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இடஒதுக்கீடு தொடர்பாக அரசியலைமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் அமலில் இருக்கும் போது, அதில் திருத்தம் கொண்டு வராமல், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என தெரிவித்தது.
குறிப்பிட்ட சமூகத்தினரை பிரித்து இடஒதுக்கீடு வழங்குவதில், எந்த அடிப்படையும் இல்லை என்றும் எனவே, அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையிலான இந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டு, அந்த அரசாணையை ரத்து செய்தது. உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்தது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அதனை மீறும் வகையில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய தலைவர், மே 31-ஆம் தேதி கூட்டம் நடத்த முடிவு செய்து அதன் உறுப்பினர்களுக்கு அதுதொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல ஒருவேளை கூட்டத்தில் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலோ, சமர்ப்பிக்கப்படும் புள்ளிவிவரங்களில் குளறுபடிகள் நிகழ்த்தப்பட்டாலோ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவர் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே மே 31ஆம் தேதி நடைபெற உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய கூட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் மனுவில் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் அமர்வு, மே 31ஆம் தேதி கூட்டத்தை நடத்திக்கொள்ளலாம். ஆனால், இடஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைகளையோ, முடிவையோ எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர். தொடர்ந்து, மத்திய, மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவர்கள் வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.







