தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பு தொடர்பாக உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதையொட்டி, தொற்று அடிப்படையில் மாவட்டங்களை மூன்றாக பிரித்து, ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவுடைகிறது.
இந்நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த ஆலோசனையில், மருத்துவ வல்லுநர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதில், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையை கேட்டறியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







