முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து திமுக ஆட்சியமைக்க இருக்கிறது.
திமுக வெற்றியை அடுத்து, தனது முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜிநாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கேரளாவில் ஆட்சியை தக்க வைத்துள்ள பினராயி விஜயன், மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க போகும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் எடப்பாடி கே பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்







