80,000 ரூபாய் வரை சம்பளம்.. உணவு, தங்குமிடம் இலவசம்..நித்யானந்தாவின் கைலாஸாவில் வேலைவாய்ப்பு என்று வெளியான அறிவிப்பு தற்போது அனைவரின் கவனைத்தையும் ஈர்த்து வருகிறது.
பல்கலைக்கழகம், ஆலயங்கள், தொழில்நுட்ப பிரிவு( IT wing ), தூதரகம், பிளம்பிங், எலக்ட்ரிகல்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பு என தமது பளிச்சிடும் சிரிப்புடன் நம்மை கைலாஸாவிற்கு அழைக்கிறார் நித்யானந்தா. ”கைலாஸாவில் வேலைவாய்ப்பு” என்ற தலைப்புடன் சமூக வலைதளத்தில் பரவி வரும் அந்த புகைப்படம், நமது கவனத்தை ஈர்த்து விடுகிறது. ஒரு கைலாஸாவே எங்கு இருக்கிறது என்று தெரியாமல் குழம்பி இருக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு கைலாஸா கிளைகளில் தகுந்த ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு என அந்த அறிவிப்பு கூறுகிறது. ஆனால், இந்தியாவோடு நின்றுவிடவில்லை. ஓராண்டு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கு பிறகு வெளிநாட்டு கைலாஸாக்களிலும் வேலைவாய்ப்பு என வெளிநாடு வரை இந்த வேலைவாய்ப்பு நீள்கிறது.
சரி எந்த வேலைக்கு தான் ஆட்கள் தேவைப்படுகிறது என்று பார்த்தால், துறைகளின் பட்டியலும் நீண்டுக்கொண்டே இருக்கிறது. நித்யானந்தா இந்து பல்கலைகழகம், கைலாஸாவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆலயங்கள், கைலாஸா தகவல் தொழில்நுட்ப பிரிவு ( IT wing ), கைலாஸா, அயல்நாட்டு தூதரகம், பிளம்பிங், எலக்ட்ரிகல்ஸ் மற்றும் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பு என்ற அறிவிப்பு, இப்போது தான் அடிப்படைக்கே ஆட்கள் தேவைபடுகிறதா? என்ற கேள்வியையே நமக்கு எழுப்புகிறது. ஆனால், இதைவிட சிறப்பு என்னவென்றால், உணவு, மருத்துவ வசதி, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்போடு, விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம் என இரண்டு தொலைபேசி எண்களும் பதிவிடப்பட்டிருந்தது.
அந்த எண்களுக்கு தொடர்புகொண்டு பேசியபோது, மறுமுனையில் பேசியவர், பெயர், வயது, படிப்பு என அனைத்தையும் கேட்டறிந்தார். அதோடு அறிவிப்பில் குறிப்பிட்ட கைலாஸா வேலைவாய்ப்பு குறித்து கேட்டபோது, அதிக இறை பக்தி உடையவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பு முகாம் நேர்காணல் முறையில் திருவண்ணாமலையில் நடப்பதாகவும் தெரிவித்தார். திருவண்ணாமலையில் எங்கு நடக்கிறது? என்று கேட்டதற்கு, நீங்கள் உங்கள் முழு விவரம் (bio data ) அல்லது resume என்கிற சுய தகுதி குறிப்பை whatsappல் அனுப்பினால், நேர்காணல் விவரத்தை உங்களுக்கு தெரியப்படுத்துவோம் என்றார்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிப்படையாக வெளியிடப்பட்டாலும், நேர்காணல் நடக்கும் இடம் படு ரகசியமாகவே வைக்கப்படுகிறது. அதோடு பயிற்சி எங்கே நடக்கும் என்ற கேள்விக்கும், அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே தெரிவிப்போம் என ரகசியம் காத்தனர். நித்யானந்தாவே ரகசியமாக தான் செயல்பட்டு வருகிறார் என்பதால் இருக்கலாம்.
நித்தியானந்தா தமிழ்நாட்டில் பிறந்தவர். பின்னாளில் கர்நாடகா, பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இந்நிலையில் நித்தியானந்தா, மீது குழந்தைகள் கடத்தல், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், சர்ச்சைக்குரிய வீடியோவும் வெளியாகி நித்யானந்தாவை சர்ச்சை வலையில் சிக்க வைத்தது. இதனையடுத்து நித்தியானந்தாவை இளைய மடாதிபதி பதவியில் இருந்து நீக்கி அப்போதைய மதுரை ஆதீனம் அறிவித்தார். பாலியல் கொடுமை வழக்குகள் மற்றும் குஜராத் ஆசிரம வழக்குகளால் நெருக்கடி அதிகரித்ததால் வேறுவழியின்றி நித்தியானந்தா தலைமறைவானார்.
அவரை சர்வதேச போலீஸ் உதவியுடன் நித்தியானந்தாவை தீவிரமாக தேடி வந்த நிலையில், edit செய்யப்பட்ட பின்னணியுடன், சற்றும் குற்ற உணர்சியே இல்லாத பளிச் என்ற சிரிப்புடன் liveல் வந்து காட்சியளிக்கிறார். நித்தியானந்தா திடீரென உடல்நலக் குறைவால் மரணம் அடைந்து விட்ட வதந்திகளை மறுத்து பதிலளித்தவர், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.
தேடப்பட்டு வரும் நபரான நித்யானந்தா இப்படி வேலைவாய்ப்புக்காக அறிவிப்பு வெளியிட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ட்விட்டர், அமேசான் போன்ற பெரும் நிறுவனங்களே பணிநீக்க வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கைலாஸா வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பேசு பொருளாகியுள்ளது.












