உத்திரமேரூர் அருகே இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்தியதால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக பெண்ணின் குடும்பத்தார் புகாரளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்பரசு என்பவரின் மகள் பிரியா (30). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரியாவுக்கு திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்ற பிரியா, தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஏழு வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் தீனதயாளனுடன், கடந்த 2021 ஆம் ஆண்டு மறுமணம் நடந்துள்ளது. பிரியாவின் முதல் திருமணம் மற்றும் குழந்தை இருப்பது தெரிந்தே தீனதயாளன், அவரை மறுமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் தமிழரசி என்ற மகள் உள்ளார்.
தீனதயாளனுக்கும் ஏற்கனவே திருமணமாகி, மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ள நிலையில், விவகாரத்து பெற்று விட்டதாக கூறி, பிரியாவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தீனதயாளன், தான் கோயில் வேலை செய்வதாகவும், தறி நெய்யும் வேலை செய்து வருவதாகவும் கூறி பிரியாவை திருமணம் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!
திருமணம் ஆன மூன்று நாட்களிலேயே பிரியாவின் 10 சவரன் நகைகளையும் தீனதயாளன் அடகு வைத்து செலவு செய்துவிட்டதாகவும், திருநங்கைகளோடு தகாத தொடர்பு வைத்துக்கொண்டு, மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்த பிரியாவோடு அடிக்கடி தகராறில் தீனதயாளன் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அம்மாவாசை இரவு பிரியாவை
மயானத்திற்கு அழைத்துச் சென்று, தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரோடு சேர்ந்து பிரியாவை கட்டாயப்படுத்தி நிர்வாண பூஜையில் தீனதயாளன் ஈடுபடுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னால், உன் அண்ணனை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் மனம் உடைந்து போன பிரியா, அங்கிருந்து தன் குழந்தையை தூக்கிக் கொண்டு தாய் வீட்டுக்கு எப்படியாவது தப்பி வந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார். ஆனால் பிரியாவிடம் இருந்து குழந்தையை தீனதயாளன் குடும்பத்தினர் பிரித்து வைத்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்துப் போன, பிரியா தன் தாய் வீட்டில் நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன பிரியாவின் குடும்பத்தார் பிரியாவை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 19ஆம் தேதி புகார் கொடுத்துள்ளனர். இருப்பினும் தீனதயாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தையை பிரியாவின் கண்ணில் காட்ட மறுத்துள்ளனர்.
காவல்துறையினரும் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்காத நிலையில், குழந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட பிரியா, தனது தாய் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரியாவின் அண்ணன் சதீஷ்குமார் சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீனதயாளன், அவரது குடும்பத்தார் மற்றும் கூட்டாளிகளை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டால், இன்னும் பல திடுக்கிடும் மர்மங்களும், தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







