நீலகிரி கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட சுண்டடி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்னீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோத்தகிரி பகுதியில் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. பல அருவிகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டாலும், சில அருவிகளில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில் மதுரை தெற்கு நகரை சேர்ந்த ஹரிஷ்(18) வார விடுமுறையை கொண்டாடுவதற்காக தனது ஐந்து நண்பர்களுடன் கோத்தகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். கோத்தகிரியில் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்த அவர்கள் மேலும் சில இடங்களை இணையதளங்களில் தேடியப்போது அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்ட சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடிவெடுத்தனர்.
நண்பர்கள் நால்வரும் அருவியில் குளிக்க யோசிக்கையில் ஹரிஷ் மட்டும் தண்ணீரில் குதித்துள்ளார். அப்போது அங்கிருந்த பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டார். இதனால் அச்சமடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். அதனை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கதினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சுமார் ஒரு மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் தண்ணீருக்கு அடியில் சிக்கியிருந்த
ஹரீஷின் உடலை மீட்டனர்.
மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து சக நண்பர்கள் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது. இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேந்தன்







