ஹரியானா; விவசாய போராட்டத்தில் சடலம் – ஒருவர் போலீஸில் சரண்

ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிக்கு அருகே ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒருவர் போலிசாரிடம் சரணடைந்துள்ளார். மத்திய அரசின் புதிய…

ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிக்கு அருகே ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒருவர் போலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் இந்த போராட்டத்தினை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த இரு மாநில எல்லையான சிங்கு பகுதியில் நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தது.

இதனையறிந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என சோனிபட் போலீஸ் சுப்பிரண்டு ரன்தாவா தெரிவித்திருந்தார். மேலும், சம்பவ பகுதியிலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதேபோல அம்மாநில முதலமைச்சர் எம் எல் கட்டார் உள்துறை அமைச்சர் அனில் விஜி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இந்த சம்பவம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நிஹாங்ஸ் எனும் ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள் குழுவை சேர்ந்த ஒருவர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார். சரவ்ஜித் சிங் எனும் நபர் வெள்ளிக்கிழமை மாலை சரணடைந்துள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ் விசாரணையில், உயிரிழந்த நபர் பஞ்சாப் மாநிலம் டாம் டரன் பகுதியை சேர்ந்த 36 வயது லக்பிர் சிங் என்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக மூன்று வீடியோக்கள் பரவி வருகிறது. அதில் நிஹாங்ஸ் எனும் ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள் லக்பிர் சிங்கை சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மற்றொரு வீடியோவில் லக்பிர் சிங்கின் ஒரு கை வெட்டப்பட்டுள்ளது தெரிகிறது.

லக்பிர் சிங் சீக்கியர்களின் புனித நூலான குரு கிராந் சாஹிப்பை அவமதித்ததாகவும், இதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் காவல்துறை இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.