ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாண்டவம் ஆடிய நிலையில், அந்த வைரஸ் வெவ்வேறு வகையாக உருமாறத் தொடங்கி அடுத்த அதிர்ச்சி கொடுத்தது. இந்தியாவில் உருவான டெல்டா வகை கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருமாறிய ஒமிக்ரான் வகை, கண்டறியப்பட்டது. வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த கொரோனா பல நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவிலும் இந்த ஒமிக்ரான் வகை தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. இதில் 114 பேர் குணமடைந்துள்ளனர். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 88 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் குறித்து அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர், ராஜேஷ் பூஷன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தொற்று அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து தொற்று மேலும் பரவாமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
பண்டிகை காலங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடினால் தொற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த இரவு நேர ஊரடங்கு தொடரும் என்றும் திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.








