பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பெண் கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பெண்கள் பட்டாலியன்களைக் கொண்ட நாட்டின் ஒரே துணை ராணுவப் படை CRPF. தற்போது இந்த படையில் ஈடுபடுத்தப்படவுள்ள 32 பெண் கமாண்டோக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காந்தி குடும்பத்தினருக்கு Z பிளஸ் பாதுகாப்பை வழங்கவுள்ளனர். விவிஐபி பாதுகாப்புக்காகப் பெண் கமாண்டோக்களை சிஆர்பிஎஃப் ஈடுபடுத்துவது இதுவே முதல் முறையாகும். முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த பெண் கமாண்டோ குழுவில் 32 பேர் இடம்பெற்றுள்ளனர். விவிஐபி எனப்படும் மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் இவர்கள் இணைக்கப்படவுள்ளனர்.
மேலும் இந்த பெண் கமாண்டோக்களுக்கு, விஐபிக்கான பாதுகாப்புப் பணிகள், சோதனைப் பணிகள், ஆயுதங்கள் இல்லாமல் சண்டையிடுவது மற்றும் ஆயுதங்கள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15-ம் தேதிக்குள் களமிறங்கத் தயாராகும் இந்த பெண் கமாண்டோக்கள், மத்திய அமைச்சர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இசட் பிளஸ் பிரிவில் இடம்பெற்றுள்ள முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணியில், சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியின் ஒரு பகுதியாக, பெண் பார்வையாளர்களை சோதனை செய்வது மட்டுமின்றி சுற்றுப்பயணங்களின்போது விவிஐபிக்களின் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போதும் முக்கிய பிரமுகர்களோடு பெண் கமாண்டோக்கள் உடன் செல்வார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காந்தி குடும்பத்தின் சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் (SPG) பாதுகாப்பை மத்திய அரசு நீக்கிய பிறகு, 2019 நவம்பரில் CRPF ஆல் Z-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது இசட் பிளஸ் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் கமாண்டோக்கள் மூலம் 24 மணி நேரப் பாதுகாப்பை CRPF வழங்கவுள்ளது. பெண்கள் அனைத்து துறைகளிலும் தடைகளைத் தகர்த்து சாதித்து வரும் நிலையில், CRPF-யின் பெண் கமாண்டோ குழுவும் பாதுகாப்புப் பணியில் சாதனைகளை நிகழ்த்தும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.







