ஜம்மு காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தேசிய தலைநகர் டெல்லி மற்றும் இதர முக்கிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி வேலைகள் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து கடந்த 10ம் தேதி தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு ஒன்றை செய்தது.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் 18 இடங்களில் சோதனையை மேற்கொண்டது. இந்த சோதனைகள் அடிப்படையில், தற்போது வரை 9 பேரை கைது செய்துள்ளதாக என்ஐஏ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை ஐந்து பேரையும், அதேபோல இன்று காலை நான்கு பேரையும் கைது செய்துள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. ஸ்ரீநகரின் இரண்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பல மின்னணு சாதனங்கள் மற்றும் ஜிகாதி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று ஸ்ரீநகர், புல்வாமா மற்றும் சோபியா மாவட்டத்தில் 19 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வசீம் அஹ்மத் சோஃபி, தாரிக் அஹ்மத் தார், பிலால் அஹ்மத் மிர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும் 4 ஜவான்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








