அடுத்ததாக தைவானாக இருக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யா – உக்ரைனை தொடர்ந்து, அடுத்ததாக தைவான் இருக்கக்கூடும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 8 வது நாளாக தாக்குதல்…

ரஷ்யா – உக்ரைனை தொடர்ந்து, அடுத்ததாக தைவான் இருக்கக்கூடும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 8 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், குடியிருப்பு பகுதிகள் என ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன. அதேபோல், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஒரு புறம் போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்ததாக போரால் பாதிக்கப்படும் நாடு தைவான் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளார். அதோடு, சீனா தற்போது நடக்கும் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை உன்னிப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கவனித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தைவான் மீதான சீன தாக்குதலை நான் எதிர்பார்க்கிறேன். ஏனென்றால், அமெரிக்கா முட்டாள் தனமாக இயங்குகிறது. எங்கள் தலைவர்கள் திறமையற்றவர்கள். அடுத்ததாக சீனா இதனைத்தான் செய்யப் போகிறது. இது அவர்களின் நேரம் என்று டிரம்ப்  பேசியுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது, அமெரிக்கா கையாண்ட விதத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் நன்றாக கவனித்துள்ளார். அவர், உயர் புலனாய்வு திறன் கொண்ட மனிதராக உள்ளார். எனவே, அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்வதற்கான வாய்ப்பாக இது அமையும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.