கோவையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 2 நாட்களாக நடைபெற்ற கல்வி கண்காட்சிக்கு மாணவர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கடந்த ஆண்டு கோவையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நடத்தப்பட்ட கல்வி கண்காட்சிக்கு கிடைத்த பெரும் வரவேற்பையடுத்து இந்த ஆண்டும் கோவை கொடிசியா அரங்கில் ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நியூஸ் 7 தமிழ் சார்பில் கல்வி கண்காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் முன்னிலையில் தொடங்கிய இந்த கண்காட்சியில், பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் தலைமைச் செயல் அதிகாரி அனுஷா ரவி, பெஸ்ட் கல்வி அறக்கட்டளை செயலாளர் அப்துல் ரஷீத், மனித வளம் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர் திருக்கோஷ்டியூர் மணிகண்டன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கண்காட்சிக்கு வருகை தந்த அனைவரையும் நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் வரவேற்றுப் பேசினார். அப்போது, தமிழர்கள் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, கண்காட்சியில் பங்கேற்ற பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கல்வி தான் தம்மை உலக நாடுகள் முழுவதும் அழைத்து சென்றதாகவும், மாணவர்கள் கற்க விரும்புவதை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சியில், 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்திருந்தன. தேசிய மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறுவதற்கான அரங்குகளும், உடனடி மாணவர் சேர்க்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்வி கண்காட்சிக்கு வருகை தந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அரங்குகளை பார்வையிட்டு விளம்பரதாரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கெளரவித்தார். நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி, கோவைக்கு பெருமை சேர்த்ததுடன் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ள கண்காட்சியாக அமைந்தது எனவும் பாராட்டினார்.
கண்காட்சியின் முதல்நாளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று பயனடைந்த நிலையில், இரண்டாம் நாளிலும் ஆயிரக்கணக்கானோர் கொடிசியா அரங்கில் குவிந்திருந்தனர். அனைவரையும் வரவேற்று பேசிய நியூஸ் 7 தமிழின் மூத்த பொறுப்பாசிரியர் சரவணன் கல்வி கண்காட்சியின் சிறப்பம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
கல்வி கண்காட்சியின் 2ம் நாளில், அசெட் காலேஜ் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி இயக்குநர் முகமது பஹாத், லீடர்ஸ் டெஸ்க் நிறுவனர் சாமுவேல் சர்ச்சில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர் ரத்தினசபாபதி உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
கண்காட்சியின் இரு நாட்களிலும் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவருக்கு நியூஸ் 7 தமிழ் மற்றும் பெஸ்ட் கல்வி அறக்கட்டளை இணைந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் விளக்கிய நிலையில், வேலைவாய்ப்பு மற்றும் பாடப்பிரிவுகள் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சியில் விடைகள் கிடைத்தன. கண்காட்சியில் பங்கேற்ற கோவை கிட்டாம்பாளையத்தை சேர்ந்த அபி என்ற அரசுப் பள்ளி மாணவியின், பொறியியல் படிப்பிற்கான முழுச்செலவையும் பெஸ்ட் கல்வி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டதுடன் உதவித்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது.
உயர்கல்வியில் தங்களுக்கு எழுந்த பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் தீர்ந்ததாகவும், கல்வி கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பல்வேறு சமூக விழிப்புணர்வு இயக்கங்களை முன்னெடுத்து வரும் நியூஸ் 7 தமிழ், மாணவர்களுக்காக கடந்த ஆண்டு கல்வி கண்காட்சியை நடத்தியது. அதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற கல்வி கண்காட்சியும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களின் பேராதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மாணவர்களுக்கான நியூஸ் 7 தமிழின் பயணம் அடுத்த ஆண்டும் தொடரும்…….