பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்தது குறித்து நியூஸ் 7 தமிழ் இன்று களஆய்வு நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு விரைந்து வழங்க வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகள் தொடர்பாக நியூஸ் 7 தமிழ் இன்று நாள் முழுவதும் களஆய்வு மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன என்பதை நேரடியாக தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நியூஸ் 7 தமிழ் எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை விரைந்து வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தது போல், நெல் கொள்முதல் நிலையங்களில் வைத்திருந்த நெல்லும் மழைநீரில் வீணானது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறக்கவும், கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும் தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய வி.கே.சசிகலா, மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிப்படையான கணக்கெடுப்புகள் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.







