நியூஸ் 7 தமிழ் சார்பாக மதுரையில் மாபெரும் கல்வி கண்காட்சி இரண்டாவது நாளாக இன்றும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்கால உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை பெற்று வருகின்றனர்.
பணிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்கிற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுவதுண்டு. உயர்கல்வி படிப்பதற்கான போதிய வழிகாட்டுதல் இல்லாமல் பல மாணவர்கள் ஏதாவது ஒரு கல்வி சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே நியூஸ்7 தமிழ் சார்பாக மதுரை காந்தி மியூசியத்தில் உயர் கல்விக்கு வழிகாட்டும் மாபெரும் கல்வி கண்காட்சி பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியுள்ளது. இந்த கண்காட்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கண்காட்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் 50-க்கும் மேற்பட்ட பிரபல கல்லூரிகளின் ஸ்டால்கள், வங்கியில் கல்வி கடன் பெற ஆலோசனை, +2 தேர்வு முடிவதற்கு முன்பே கல்வி உதவிக்கு பதிவு செய்வது, +2 தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு நிச்சய கல்வி உதவித் தொகை, மேற்படிப்பு குறித்து தன்னம்பிக்கை, பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தான்.
இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் இந்த கல்வி கண்காட்சியில் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். மேலும் இரண்டாவது நாளான இன்றும் உயர் கல்வி குறித்த ஆலோசகர்களின் கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பங்குபெறும் மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
இளைய தலைமுறையினரின் எதிர்கால வாழ்க்கை குறித்த பயத்தினை போக்கி, அதுகுறித்த புரிதல்களை எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் நியூஸ் 7 தமிழ் முன்னெடுக்கும் இதுபோன்ற முயற்சிகளுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர். இந்த கல்விக் கண்காட்சியை காண வருகை தரும் அனைவருக்கும் அனுமதி இலவசம் என நியூஸ் 7 தமிழ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா