சுற்றுலா பயணி தவறவிட்ட ரூ.50,000 பணத்தை உரியவரிடமே ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் பூபாலனின் செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு சுற்றுலா வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பயணி ஒருவரை, யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் இருந்து ஆட்டோ ஓட்டுநர் பூபாலன் தனது ஆட்டோ மூலம் காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் பெருமாள் கோவிலுக்கு அழைத்து சென்று இறங்கிவிட்டு வந்துள்ளார்.
பிறகு ஆட்டோ டிரைவர் பூபாலன் வழக்கம் போல் மதிய உணவிற்கு செவிலிமேட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்த சமயம், பின் இருக்கையில் பை ஒன்று இருப்பதை பார்த்துள்ளார். அந்த பையை பரித்து போது பையில் புகைப்படம், ஏடிஎம் கார்டு, பஸ் பர்மிட் மற்றும் ரொக்க பணம் ரூ.50,000 இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து, இவர் நம் ஆட்டோவில் வந்த ராஜஸ்தான் பயணி தான் என்று உறுதிப்படுத்திய ஆட்டோ ஓட்டுநர், யாத்திரி நிவாஸ் விடுதிக்கு சென்று, தன் ஆட்டோவில் வந்த ராஜஸ்தான் பயணியை தேடி கண்டுபிடித்து அவர் தவறவிட்ட பை மற்றும் ரொக்க பணம் ரூ.50,000ஐ திருப்பிக் கொடுத்தார்.
இதை பார்த்த ராஜஸ்தான் பயணி நான் தவறவிட்ட பணம் திரும்ப கிடைத்துவிட்டது என்று பெரும் மகிழ்ச்சியடைந்த அவர், ஆட்டோ ஓட்டுநர் பூபாலனை கட்டி அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தி அவரை பாராட்டினார். ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை நேர்மையாக உரியவரிடமே சேர்த்த பூபாலனின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றன.







