புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் பூச்சுவேலை செய்ய சென்ற இருவர், மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியில் பூச்சு வேலை செய்வதற்காக கட்டுமான தொழிலாளிகளான மணிகண்டன், அய்யப்பன், மற்றும் அறிவழகன் ஆகிய மூவர் சென்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்களில் மணிகண்டன் மற்றும் அய்யப்பன், இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். இறங்கிய சில நிமிடங்களிலே இருவரும் மயங்கினர். இதனை பார்த்து, அவர்களை காப்பாற்ற சென்ற அறிவழகனும் மயங்கியுள்ளார். இதையறிந்த கடையின் உரிமையாளர் சேகர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், மணிகண்டன், அய்யப்பன், மற்றும் அறிவழகன் ஆகிய மூவரையும் மீட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் மற்றும் அய்யப்பன் உயிரிழந்தனர். மயங்கிய நிலையில் உள்ள அறிவழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.