நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பிஜி, வானாட்டு, நியூ ஜெனியா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து பிஜி உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் லேசான சுனாமி உணரப்பட்டது. கடலில் 1.5 அடி அளவில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவானது. இதன் மூலம் மேலும் சுனாமி உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானாட்டுவின் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை கடலோரப் பகுதிகளில் இருந்து உயரமான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் வானொலியை தொடர்ந்து கேட்டு அதில் சொல்லப்படும் தகவல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டது.
இந்த நிலநடுக்கமானது பசிபிக் பகுதியில் உள்ள பிஜியின் தென்மேற்கிலும், நியூசிலாந்தின் வடக்கிலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கிலும் உள்ள லாயல்டி தீவுகளுக்கும் இடையில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது கடலைல் 37 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான பூகம்பங்கள் இப்பகுதியில்தான் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.







