கேன் வில்லியம்சன்: நியூஸி. அணியின் தனி ஒருவன்

கூல் கேப்டன் என அழைக்கப்படுபவர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். நாடு கடந்து கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் அவரது தனித்துவமான விளையாட்டு திறமையை விவரிக்கிறது இந்த கட்டுரை. அணிக்குள், களத்தில், களத்திற்கு வெளியே…

கூல் கேப்டன் என அழைக்கப்படுபவர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன். நாடு கடந்து கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் அவரது தனித்துவமான விளையாட்டு திறமையை விவரிக்கிறது இந்த கட்டுரை.

அணிக்குள், களத்தில், களத்திற்கு வெளியே என அனைவரையும் அரவணைத்து, எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதமாக விளையாடுவது என்பது அபூர்வம். அப்படிப்பட்ட அபூர்வமானவர் தான் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். பொதுவாகவே கிரிக்கெட்டை ஜெண்டில்மேன் விளையாட்டு என்று சொல்லுவார்கள். அதை யாருக்காவது நிரூபிக்க வேண்டிய நிலைமை இருந்தால் கொஞ்சமும் யோசிக்காமல் கேன் வில்லியம்சின் ஆட்டத்தை காட்டலாம். 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியில் வெற்றி வாகை சூடியவர் கேப்டன் கேன் வில்லியம்சன்.

நியூசிலாந்து அணியின் 28 கேப்டன்களால் வெல்ல முடியாததை 29வது கேப்டனான வில்லியம்சன் வென்று காட்டினார். இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்துத் தான் நியூசிலாந்து வென்றது என்ற போதிலும், கேன் வில்லியம்சின் கேப்டன்சிப்பிற்கு தகுதியான வெற்றிதான் இது என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களே புளகாங்கிதம் அடைந்தார்கள் என்றால், கேன் வில்லியம்சின் ஆட்டமும், கேப்டன்சிப்பும், நடவடிக்கைகளும் எவ்வளவு தூரம் ஈர்த்திருக்கும். களத்திற்குள்ளும் சரி வெளியேவும் சரி, அவரது அணுகுமுறை மிக சிறப்பான ஒன்று. எதனால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ‘கூல் கேப்டன்’ என சொல்கிறோமோ அதே குணாதிசியங்களை தன்னகத்தே கொண்டிருப்பவர் கேன் வில்லியம்சன்.

கடந்த 2016 முதல் நியூசிலாந்து அணியை கிரிக்கெட்டின் அனைத்து பார்மேட்டிலும் வழி நடத்தி வரும் வில்லியம்சன் பல நெருக்கடியான தருணங்களை எளிதாக கையாண்டுள்ளார். அதனால் தான் அவர் இந்தியா உட்பட உலகின் அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பிடித்தமான வீரராக உள்ளார். 2019 ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியை பார்த்த யாராலும் வில்லியம்சனின் களங்கியிருந்த கண்களை மறந்து விட முடியாது. அந்த போட்டியில் இங்கிலாந்து வென்றதை காட்டிலும், நியூசிலாந்து அணி தோற்றதை குறித்து பேசாதவர்களே இல்லை. ஆட்டம் சமனில் முடிந்த போதும் விதிகளை காரணம் காட்டி கோப்பையை இங்கிலாந்துக்கே கொடுத்தனர். அரியாசனம் இல்லாவிட்டாலும் பாகுபலி மக்கள் மனதில் மன்னனாகவே இருந்ததை போலத்தான், கோப்பை தான் கிடைக்கவில்லையே தவிர, கேன் வில்லியம்சன் தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

விழுந்த இடத்திலேயே, எழுந்து நின்றார் கேன் வில்லியம்சன். அதே இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் சாம்பியன்ஸிப்பில் கோப்பைய ஏந்திய போது எல்லோர் உதடுகளும் உதிர்த்த வார்த்தைகள், “HE DESERVES IT”. வில்லியம்சனின் இயல்பை ஒரே வார்த்தையில் குறிப்பிட வேண்டுமானால், ‘ஆபத்பாந்தவன்’ என்று சொல்லலாம். தான் சார்ந்த அணி எப்பொழுதெல்லாம், நெருக்கடியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம், அதனை மீட்க ஒற்றை மனிதனாகப் போராடும் போராளிதான், கேன் வில்லியம்சன்.

ஆடுவது டெஸ்ட் போட்டியோ, ஒருநாள் போட்டியோ, டி20யோ, எந்த ஃபார்மட்டாக இருந்தாலும், தனது தனித்துவத்தால், வியத்தகு ஆட்டத்தை ஆடிக்கொண்டே இருப்பார் வில்லியம்சன். தனது அணிக்காக தனிஒருவனாக, அவர் அரங்கேற்றிய ‘ஒன் மேன் ஷோக்கள் ஏராளம். சர்வதேச போட்டியோ, ஐபிஎல்லோ எதுவாகினும் தனது ‘தி பெஸ்ட்’ ஆட்டத்தை ஆடிவிட வேண்டும், தன்னால் இயன்ற அத்தனையையும் 100 சதவிகிதம் செய்ய வேண்டும் என்ற அவரது முனைப்புதான், நாடு கடந்து அவர் கொண்டாப்படுவதற்கான காரணம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.