தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராகவும் பதவி வகித்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி. இவர் தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சியையும் தொடங்கி நடத்தினார். முதுமையின் காரணமாக அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் வயது மூப்பினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 87. தற்போது அவரது உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், திண்டிவனம் கே.ராமமூர்த்தியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.







