நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்திற்காக 200 குடில்களுடன் கூடிய ஒரு கிராமத்தை போன்ற பிரமாண்ட செட் அமைத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு.
நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்ககப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதியில் 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமான கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படப்பிடிப்பு வரும் ஜூன் 24-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றுவிடும் என கூறப்படுகிறது. இதையடுத்து இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கப்படவுள்ளது.
இந்த வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால் விரைவில் திரைப்படத்தின் டீசரை வெளியிட படக்குழு வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







