இந்தியாவிற்காக விளையாடுவதே பெருமை, அடுத்த முறை இந்த வெண்கலப் பதக்கத்தின் நிறம் நிச்சயம் மாறக்கூடும் என, ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் அபய் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வளாகத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் இறுதிப் போட்டியில் எகிப்து, மலேசியா அணிகள் மோதின. இறுதிப் போட்டியில் மலேசியாவை 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி எகிப்து அணி அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இரண்டாவது இடத்தை மலேசியாவும், மூன்றாவது இடத்தை இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளும் இணைந்து பகிர்ந்துக் கொண்டனர். எனவே வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
பரிசளிப்பு விழாவிற்கு பின் மூன்றாவது இடம் பிடித்து ஜப்பான் அணியுடன் வெண்கலப் பதக்கம் பகிர்ந்து கொண்ட இந்திய அணியின் வீரர் அபய் சிங் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..
” எல்லா போட்டிகளிலும் வெற்றி என்பது முக்கியம். வெண்கலம் வென்றதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் தங்கம் கிடைக்காதது சற்று ஏமாற்றம் தான். உலகக் கோப்பை என்றாலே பொதுவாகவே முதல் நிலை தரமான வீரர்கள் தான் பல்வேறு நாடுகளில் இருந்து வருவார்கள், ஸ்குவாஷ் விளையாட்டும் அப்படியானது தான்.
தமிழ்நாடு அரசின் முயற்சியால் எங்களுக்கு ஸ்குவாஷ் விளையாட்டில் அடுத்தடுத்து ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. நமது நாட்டுக்காக விளையாடுவதே ஒரு சிறப்பு, சென்னையில் விளையாடுவது கூடுதல் சிறப்பு. அதிலும் இந்த தொடரில் வெண்கல பதக்கம் சென்னையில் வென்றது அற்புதமான ஒன்று.
எனது அடுத்த இலக்கு சீனாவிற்கு சென்று கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடி பதக்கம் வெல்வதே. அடுத்ததாக நாங்கள் சந்திக்க உள்ள ஆசிய கோப்பை போட்டிகளில் நிச்சயம் தங்கம் வெல்வோம்.” என அபய் சிங் தெரிவித்துள்ளார்.







