Co-WIN செயலி மூலமாக ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 6 பேர் வரை பதிவு செய்யலாம் என்ற வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தமிழ்நாட்டில், கடந்த ஜனவரி 3ஆம் தேதி 15-18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மேலும், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் நடைப்பெற்று வருகிறது.
இந்த தடுப்பூசி செலுத்திகொள்ளும் பணியை கண்கானிக்க இந்த செயலி பயன்படுகிறது. இதில், தடுப்பூசி கையிருப்பு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி, தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் என பல வசதிகள் உண்டு.
இந்த செயலியில் ஏற்கெனவே 4 பேர் ஒரே எண்ணில் பதிவு செய்யலாம் என்று இருந்த நிலையில் தற்போது 6 பேர் வரை பதிவு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள் Co-WIN செயலியில் தவறாக இடம் பென்றிருந்தால் பயனாளிகள் திருத்திக்கொள்ளும் வசதி புதிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் Co-Win செயலியில் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பான திருத்தங்களை மேற்கொண்ட பின் அடுத்த 3 முதல் 7 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக மாற்றி அமைக்கப்படும். Co-WIN செயலியில் பயனாளிகளின் தடுப்பூசி சான்றிதழ் விவரம் தவறாக உள்ளது என சில புகார்கள் எழுந்த நிலையில் புதிய அம்சங்களுடன் கூடிய வசதியுடன் Co-WIN செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.








