தமிழ்நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து பயன்களும் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்காக, புதிய செயலி உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனித்து வரும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாற்றுத் திறனாளிகளுக்கு, அனைத்து பயன்களும் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய செயலி உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த செயலியில், மாநிலத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் குறித்த தரவுகளும் பதிவேற்றம் செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எந்த திட்டங்கள் பயன் தரும் என்பதும் தெரிவிக்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேலைவாய்ப்புகள், பயிற்சிகள், நேர்காணல்கள், சிகிச்சைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் விற்பனையாளர்கள், உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைத்து தகவல்களும் இந்த செயலி மூலம் ஒருங்கிணைக்கப்படும். மேலும், கல்வி உதவித்தொகை, சிகிச்சை, உபகரணங்கள் வாங்குவதற்காக கிரவுட் பண்டிங் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றும், இந்த செயலி மூலம் 8 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ள மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள், அடுத்த ஆண்டு இந்த செயலி முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.