இந்திய அணிக்கு புதிய சுழற்பந்து பயிற்சியாளர் நியமனம்: யார் இந்த சாய்ராஜ் பகுதுலே…?

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் 2026 தொடர் நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சாய்ராஜ் பகுதுலே இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த சாய்ராஜ் பகுதுலே…?

பஹுதுலே ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் 1997 முதல் 2003 வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இவர் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 8 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். லெக்-ஸ்பின்னரான பகுதுலே 188 முதல் தரப் போட்டிகளில் 630 விக்கெட்டுகளையும், 143 லிஸ்ட் ஏ போட்டிகளில் 197 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், முதல் தரப் போட்டிகளில் 6176 ரன்களையும் அவர் எடுத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றி இருந்தார். மேலும் பகுதுலே விதர்பா, கேரளா, குஜராத் மற்றும் வங்காளம் ஆகிய உள்ளூர் அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியதன் மூலம், விரிவான பயிற்சி அனுபவத்தைப் பெற்றுள்ளார்.

2022-ல் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பகுதுலே பணியாற்றியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.