தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று சட்டபேரவையில் தீர்மானம்!

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதலமைச்சர் விஜய் தீர்மானம் கொண்டுவருகிறார்

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் பொது பட்ஜெட்டும், இரண்டாவது நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் தீர்மானம் கொண்டுவருகிறார்.

இதன்படி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுத்துறைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்தது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறனர்.

இந்த சூழலில் இன்றை சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.