ஓஎஸ்எம் டெண்டர் முறைகேடு: சிபிஎஸ்இ தலைவர், செயலாளர் இடமாற்றம்…!

ஓஎஸ்எம் டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஎஸ்இ-யின் தலைவர், செயலாளர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படும் பொதுத்தேர்வு விடைத்தாள்களை துல்லியமாகவும் திருத்துவதற்காக ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், காகித விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, பேராசிரியர்கள் கணினித் திரை மூலமாகவே புள்ளிகளை வழங்குவார்கள்.

அண்மையில் இந்த ஓஎஸ்எம் சேவைகளைத் தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடப்பட்டது. இதில், விதிகள் மீறப்பட்டு, குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்குச் சாதகமாகப் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக த்திய கல்வி அமைச்சகத்திற்கு ரகசிய புகார்கள் அளிக்கப்பட்டன.

மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர்புடைய இந்த அமைப்பில் இத்தகைய புகார் எழுந்துள்ளது, அரசியல் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடு விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த ஒரு உயர்மட்ட விசாரணை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகியோரை இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த ஓஎஸ்எம் டெண்டர் யாருடைய அனுமதியின் கீழ் விடப்பட்டது? விதிகளுக்குப் புறம்பாக நிதி முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு, தனது விசாரணை அறிக்கையைக் காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.