“வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது” – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உறுவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்கம்-வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, ஆகஸ்ட் 16 முதல் 18-ஆம் தேதி வரை வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகள், மேற்கு வங்கம், வங்கதேசம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், ஆகஸ்ட் 16 முதல் 18-ஆம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்குள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.