காவல்துறை அத்துமீறல் விவகாரம் : 10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

காவல்துறை அத்துமீறல் விவகாரத்தில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரிய மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் பி.சுந்தரராஜன் என்பவர் கடந்த 2004ம் ஆண்டில் தனது கடையிலிருந்து 3.5 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டது தொடர்பாக புகார் அளித்த நிலையில், அவரை மிரட்டியும், துன்புறுத்தியும் காப்பீட்டுக்காக கொடுக்கப்பட்ட பொய்யான வழக்கு என எழுதி வாங்கியதோடு ரூ.5 லட்சம் மற்றும் 620 கிராம் வெள்ளி பொருட்களை காவல் அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக “காக்கி சட்டை கொள்ளையர்கள்” என்ற பத்திரிகை செய்தி அடிப்படையில் வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், சுந்தரராஜனிடம் துன்புறுத்தப்பட்டது உறுதியானதால், அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், இத்தொகையை காவல் கண்காணிப்பாளர் ஏ. பாரி , துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் துரைசாமி, உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகிய 4 பேரிடமிருந்து வசூலிக்க உத்தரவிட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, அரசாணை பிறப்பித்து, இழப்பீட்டுத் தொகையை உடனடியாக பாதிக்கப்பட்டவருக்கு பட்டுவாடா செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், காவல் அதிகாரிகள் ராமகிருஷ்ணன், துரைசாமி, ரமேஷ் ஆகியோர் இழப்பீட்டு தொகையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதே வேளையில், காவல் கண்காணிப்பாளர் ஏ.பாரி, இந்த சம்பவத்தில் தொடர்பில்லாத தனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், இழப்பீடு வழங்க பிறப்பித்த அரசாணையை மொத்தமாக ரத்து செய்தது.

அந்த உத்தரவை எதிர்த்து, சுந்தர ராஜன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா.பி.வராலே ஆகியோர்அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் லட்சுமணன் ராஜா ஆஜராகி, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தீர ஆராயமல் மனுவில் இல்லாத கோரிக்கையை கையிலெடுத்து அரசாணையை ரத்து செய்துள்ளது, இது ஒரு தவறான நடவடிக்கையாகும். எனவே இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மனுதாரருக்கு இழப்பீட்டு தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதிகள், மனுவில் வைக்கப்படாத கோரிக்கை மீது எவ்வாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது? என கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள். ஏ.பாரி, ராமகிருஷ்ணன், துரைசாமி, ரமேஷ் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.