புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை உறுதி

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும், இதனால் வட இந்தியர் ஆதிக்கம் வரும் என்பது தவறான கருத்து என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.   உலக விண்வெளி…

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும், இதனால் வட இந்தியர் ஆதிக்கம் வரும் என்பது தவறான கருத்து என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இந்திய விண்வெளி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் நடைபெற்ற கண்காட்சியை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், காலத்திற்கு ஏற்ற பயிர் செய்யும் முறைக்கு விஞ்ஞானிகளின் ஆலோசனையை பயன்படுத்தி விவசாயிகாளும், அரசாங்கமும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். புதுச்சேரி மாநிலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மாநில பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகிறது. இதனை ஒருங்கிணைக்கவே சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தரமான கல்வி குழந்தைகளுக்கு கிடைக்கும் என கூறினார்.

மேலும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் வட இந்தியர் ஆதிக்கம் வரும் என்று தெரிவிப்பது தவறான கருத்து என விளக்கமளித்த அவர், புதுச்சேரியில் கண்டிப்பாக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். ஏழை மாணவர்களுக்கான கல்வித்தரத்தை உயர்த்த கூடாது என சில அரசியல்வாதிகள் நினைக்கின்றனர் என குற்றம்சாட்டினார்.

 

தமிழ்நாட்டில் 1,400 க்கும் மேற்பட்ட சிபிஎஸ்சி பள்ளிகள் உள்ள நிலையில் வட இந்தியர்கள் ஆதிக்கம் உள்ளதா? என கேள்வி எழுப்பிய தமிழிசை, இந்தியை திணிப்பதாகவும், குலக்கல்வியை திணிப்பதாகவும் ஒரு சில தலைவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக படிக்க வேண்டும் அனைத்தையும் அரசியலாக வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.