தமிழ் தெரிந்த மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது
மிகப்பெரிய பாக்கியம் என்றும் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டுமென நினைத்தது
இல்லை என்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள் பதவி ஏற்று இன்றுடன் 1 ஆண்டு நிறைவடைந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மதிய விருந்து அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழிசை பேசியதாவது:
புதுவையை மேம்படுத்த கடந்த 1 ஆண்டில் பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் புதுச்சேரி மாடல் சிறப்பு மாடலாக இருந்தது. கொரோனா காலத்தில் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் அனைத்து விழாக்களையும் பாதுகாப்பாக கொண்டாட உலகத்திற்கு சொல்லி கொடுத்தோம்.
அனைத்து வகையிலும் புதுச்சேரி முன்னேறி வருகிறது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மருந்துத் தட்டுப்பாடு இருக்க கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் புதுச்சேரிக்கு வந்தபோது ஜிப்மர் இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள
அனைத்து அரசு மருத்துவமனைகளும் முன்னேறிய மருத்துவமனையாக மாறும்.
மேலும் எந்த விதத்திலும் தனக்கு சுயநலம் கிடையாது. தமிழ் தெரிந்த மாநிலத்தில்
பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டுமென நினைத்தது இல்லை. பறிகொடுத்த உரிமையை மீட்டெக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் தமிழிசை செளந்தரராஜன்.








