சுயேட்சை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்: உட்கட்சி பிரச்சனை ஏற்படுத்திய விநோதம்

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனையால் நம்பமுடியாத பல அதிரடிக் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஒருவர் இரட்டை இலையை தவிர்த்துவிட்டு சுயேட்சை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். …

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனையால் நம்பமுடியாத பல அதிரடிக் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஒருவர் இரட்டை இலையை தவிர்த்துவிட்டு சுயேட்சை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். 

தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு அடுத்த மாதம் 9ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 4-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் ஜூலை 9ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த வார்டில் அதிமுக சார்பில் முருகேசன் என்பவர் போட்டியிடுவார் என மாவட்ட அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.  முருகேசன் இன்று கட்சியிருடன் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பரமசிவத்திடம்,
வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமோ என்கிற சந்தேகம் முருகேசனுக்கு எழுந்துள்ளது. அக்கட்சியில் இதற்கு முன்பு உட்கட்சி பிரச்சனைகள் உச்சக்கட்டத்தை எட்டியபோது இரண்டு முறை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுகள் மனதில் நிழாலாடியதால் முருகேசன் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.  இதையடுத்து,  குலையுடன் கூடிய தென்னை மரம், குழாய் தண்ணீர், வைரம் ஆகிய மூன்று சின்னங்களில் ஒரு சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டுமென வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்

அதிமுகவில் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்று வெடித்த சர்ச்சை, தற்போது சூறாவளியாக சுழன்று கொண்டிருக்கிறது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கிடையேயான மோதல் பகிரங்மாகியுள்ள நிலையில் அக்கட்சியில் அடுத்தடுத்து என்னென்ன அதிரடிகள் அரங்கேறும் என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஒருவர் முன்னெச்சரிக்கையாக, இரட்டை இலை சின்னத்திற்கு பதிலாக சுயேட்சை சின்னத்தில்போட்டியிட முடிவு செய்திருப்பது கட்சியினரிடையே பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.