விழுப்புரத்தில் இரு சக்கர வாகனத்திற்கு மூன்று மாத தவணை செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர் இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்டார். மகன் உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவிக்குமார் (22) என்ற இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வருகிற நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் மாதத் தவணையில் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினார்.
இந்த இரு சக்கர வாகனத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக மாதத் தவணையை ரவிக்குமார் செலுத்தாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர் இளைஞரின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் அந்த இளைஞரைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மனமுடைந்த இளைஞர் பூச்சி மருந்து குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரிகிறது. அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக டவுன் போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் உடல் இன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள் இளைஞரின் தந்தையான செல்வம் உடல்நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். மகன் உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








