கிரிக்கெட்டிற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கும் அளவிற்கு கால்பந்து விளையாட்டிற்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சிறு வயது முதலே நம் தெருக்களிலும் மைதானங்களிலும் கால்பந்து விளையாட்டு போட்டிகளில் காற்றை நிரப்பி நிரப்பி பல பந்துகளை அடித்து கிழித்திருப்போம். ஆனால் தற்போது எவ்வளவு அடித்தாலும் கிழியாத கால்பந்து ஒன்றினை ஜப்பான் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த நெண்டோ என்ற நிறுவனம் ஒரு புதிய வகை கால்பந்தினை இந்த ஆண்டு உருவாக்கியுள்ளது. இதில் காற்று நிரப்பத் தேவையில்லை. எவ்வளவு அடித்தாலும் கிழியாது. பிறகு எப்படி இதனை பயன்படுத்துவது?
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புதிய வகை கால்பந்தானது 54 தனித் தனி பாகங்களால் மூன்று வெவ்வேறு வகையான கூறுகளைப் பயன்படுத்தி, ஒருசேர உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாகங்களானது பாலிப்ரொப்பிலீன் மற்றும் செயற்கை
எலாஸ்டோமெரிக் பிசின் கூறுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கால்பந்தினை போன்றே, வளைந்து கொடுக்கும் வல்லமை பெற்றதாக இருக்கிறது. “நாம் இதுவரை பயன்படுத்தி வரும் கால்பந்து ஒருமுறை கிழிந்தால் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய கால்பந்து வாங்குவதே வழக்கம். ஆனால், இந்த புதிய கால்பந்தில் இருக்கும் 54 பாகத்தில் ஒரு பாகம் உடைந்தால் அல்லது பழுதடைந்தால், அந்த ஒரு பாகத்தினை மாற்றினால் மட்டுமே போதுமானது. முழு பந்தினையும் ஓரங்கட்டி வைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்கின்றது நெண்டோ நிறுவனம்.

இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்தவும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடியும் என அந்நிறுவனம் நம்புகிறது. பெரும்பாலும், நலிந்த சமூகங்களின் இளைஞர்கள் கால்பந்து பந்தைப் வாங்குவதும் அதைப் பராமரிப்பதும் கடினம். இந்த சிக்கலுக்கான பதிலாக, இந்த புதிய கால்பந்து அமையும் என்று நெண்டோ நிறுவனத்தினர் நம்புகின்றனர்.மேலும் இது பல்வேறு வண்ணங்களிலும் தயாரிக்கப்படுகிறது என்கின்றனர் அந்நிறுவனத்தினர்.