முக்கியச் செய்திகள் தமிழகம்

“நீட்” குறித்த ஆய்வுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த குழுவுக்கு எதிராக, பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை, தமிழ்நாடு அரசு நியமித்திருந்தது. இதை எதிர்த்து பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான இன்றைய விசாரணையில், நீட் பாதிப்புகள் குறித்து குழு அமைத்த அரசின் இந்த அறிவிப்பாணை, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல, என்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், “அரசுப் பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு, நீட் தேர்வு காரணமாகத் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை எனவும், குழு அமைத்தது என்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இக்குழு அமைக்கப்பட்டது மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவும் இல்லை, குழு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் அதைப் பயன்படுத்தி, பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெறும் வகையில், மத்திய அரசிடம் மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்கக் கோரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படலாம், குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூறமுடியாது, மக்கள் கருத்துக் கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைத் தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை.” எனக்கூறி கரு.நாகராஜனின் மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்

Saravana Kumar

இந்தியன் 2 தாமதம்: இயக்குநர் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

Halley karthi

அசாம் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தலில் ஆதாயமடைந்த பாஜக!

Arun