நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று முதல் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார்.
ஜனவரி 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுவதாகவும், பிப்.4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் எனவும் தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். அதேபோல பிப்.5ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை எனவும், பிப்.7ம் தேதி மனுவை வாபஸ் பெற இறுதி நாள் என்றும் அதேபோல வாக்கு எண்ணிக்கை பிப்.22ம் தேதி நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் விருவிருப்பாக நடந்தது. சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். தமிழ்நாடு முழுவதும் நேற்றுவரை 37,518 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மேலும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதன்படி, வேட்பாளர் மற்றும் வேட்பாளரை முன்மொழிபவர் என இருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்ததையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியலை திட்டமிட்டபடியே வரும் 7-ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.







