நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல – டிடிவி தினகரன்

நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை
சிக்கல்களுக்கு மத்திய அரசு தீர்வுகாண வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வினாத்தாள் கசிவு குறித்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாக கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கின்றன.

மருத்துவராக வேண்டும் என்ற நீண்ட நாள் கனவை, நீட் தேர்வு பறித்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறமும், தேர்வு நடைமுறைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் குளறுபடிகள், வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் குழப்பங்கள் மறுபுறமும் மாணவ, மாணவியர்களின் மனநிலையை கடுமையாகப் பாதித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல, எந்தவொரு தேர்வின் முடிவும் ஒருவரின் எதிர்காலத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் முடிவுக்கு கொண்டுவராது என்பதையும் உணர்ந்து மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வை அச்சத்துடனோ பதற்றத்துடனோ அணுகாமல் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அதேசமயம், தமிழ்நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு நீட் தேர்வு மாணவர்கள் மீது மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும். எனவே, நீட் தேர்வைச் சுற்றியுள்ள நடைமுறை சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வெளிப்படையான, நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.