நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் : மக்களவையில் மாணிக்கம் தாகூர் அவசர ஒத்திவைப்பு நோட்டீஸ்…!

மக்களவையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி மாணிக்கம் தாகூர் எம்.பி. அவசர ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை.20) தொடங்குகிறது. அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இந்த நிலையில் மக்களவையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. அவசர ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

அந்த நோட்டீசில் “நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துள்ள இந்த அத்தியாவசியப் பிரச்சினை குறித்து அவையின் மற்ற பணிகளை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக விவாதிக்க வேண்டும். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் மற்றும் தேசிய தேர்வு முகமையின் குளறுபடிகள் குறித்து மக்களவையில் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதால், அவையின் வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இந்த பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் நுழைவுத்தேர்வில் குளறுபடிகள் நடந்தன. தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்து பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த விவாகராம் தொடர்பாக 10-ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

வினாத்தாள் கசிவால் மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.